”மனித உள்ளத்தைத் தவிர, பூமி மற்றும் சொர்க்கம் எல்லாமே உனக்காக விதித்துள்ளேன்,அதனையே எமது ஒளியும் அழகும் குடிகொள்ளும் இடமாக ஆக்கியுள்ளேன்…”
— பஹாவுல்லா
காலப்போக்கில் மேலும் மேலும் மக்கள் பஹாவுல்லாவின் போதனைகளில் ஒரு சீர்பட்ட உலகின் காட்சியை கண்டுகொள்கிறார்கள். அத்துடன்
அதன் மெய்மைக்கு இலக்கு கொண்ட முயற்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கைகளின் மிகச்சரியான உட்பார்வைகளுக்கான தோற்றுவாயாகவும் ஆகிறது. பலர் இன்னும் சற்று முன்னேறிச் சென்று பஹாய் சமயத்தை ஒரு மதம் என்கிற ரீதியில் ஆராய முடிவு செய்கின்றனர். அவ்வாறு செய்கையில், மனித இயல்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விளக்கத்தையும், கடவுள் மனிதகுலத்தை வழிநடத்தும் விதம் பற்றிய விவரணையையும், இருப்பின் இத்தளத்தில் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் மரணத்திற்குப் பிறகான வாழ்வின் தன்மை பற்றிய அதன் கூற்றுகள், மற்றும் தனிநபர் மற்றும் கூட்டு வழிபாட்டு வாழ்க்கை தொடர்பான அதன் கட்டளைகள் ஆகியவற்றை அவர்கள் ஆராய்கின்றனர். நிச்சயமாக, அவர்கள் அதன் மேலும் அதன் புனித வாசகங்கள் மற்றும் சட்டங்கள் மற்றும் அதன் நிர்வாக அமைப்பை நிர்வகிக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளுடன் தங்களை பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள். இவை மற்றும் இவற்றையொத்த கூறுகளையும் ஏற்றுக்கொள்வதென்பதானது பஹாவுல்லாவின் போதனைகளை மெய்மைப்படுத்தத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு வலுவான சமூக வாழ்க்கையில் பங்கேற்க அவர்களுக்கு வழி வகுக்கிறது. பஹாய்கள் தங்களது மத நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது இயல்பானது மேலும் எந்தவொரு நபரும் தமது இதயத்தினுள் நம்பிக்கையின் தீப்பொறியை உணர்ந்தால், அவர் – உண்மையில் – பஹாய் சமூகத்தின், அதன் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிர்வுக்கு பங்களிப்பு செய்யும் ஒரு துடிப்பான உறுப்பினராவதற்கு வரவேற்கப்படுகிறார். எவ்வாறாயினும், “மதமாற்றம்“ போன்ற வார்த்தைகளின் பொதுவான கருத்துகள் இந்த செயல்முறைக்கு பொருந்தாது மற்றும் பஹாய் சமயத்தில் மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வில், ஒரு பஹாய் தனது நம்பிக்கைகளை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த செயலானது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நம்ப வைப்பதற்காகவோ அல்லது நிரூபிப்பதற்கான முயற்சியோ அல்ல. வாழ்தலின் அடிப்படை பிரச்சினைகள் பற்றிய அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்காகவும், உண்மையைத் தேடவும் மற்றும் தவறான கருத்துக்களை அகற்றவும் ஒரு உண்மையான ஆவலின் வெளிப்பாடேயாகும். “நீங்கள் ஒரு குறிப்பிட்ட உண்மையை அறிந்திருந்தால்“, பஹாவுல்லா கூறியுள்ளார், “மற்றவர்களிடம் இல்லாத ஒரு இரத்தினத்தை நீங்கள் வைத்திருந்தால் அதை அவர்களுடன் மிகுந்த தயவு மற்றும் நல்லெண்ணத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றினால் உங்கள் குறிக்கோள் அடையப்படுகிறது. எவரேனும் அதை மறுத்தால், அவரை விட்டுவிட்டு , அவரை வழிநடத்தும் படி கடவுளிடம் மன்றாடுங்கள்.“
எவ்வாறாகினும், ஒரு சிறந்த உலகைக் கட்டியெழுப்ப நம்பிக்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே போதுமானதாகாது – முனைப்படுத்தப்பட்ட செயலும் அவசியமாகிறது. பஹாவுல்லா இவ்வாறு எழுதுகிறார்: “எழுதப்பட்டவையை மெய்மைப் படுத்தவும் செயலாக்கப் படுத்தவும் முயற்சிப்பது அகப்பார்வை மற்றும் புரிந்துணர்வு உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகிறது“.